Showing posts with label music. Show all posts
Showing posts with label music. Show all posts

Monday, January 29, 2018

இளையராஜா இசையமைத்த


இளையராஜா இசையமைத்த ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ (வள்ளி), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுகிறேன். இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாகப் பின்னியெடுக்கப்பட்டவை - இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை நமக்குத் தருகிறது. பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம். அந்த உலகத்தில் கள்ளம் கபடமற்ற ஒருவரால் மட்டுமே பூரணமாகச் சஞ்சரிக்க முடியும்.

கல்யாணி ராகத்தில் அமைந்த ‘ஜனனி ஜனனி’ (தாய் மூகாம்பிகை) அவரே பாடிய பாடல். இறை நிலைக்கும், யோக நிலைக்கும் இப்பாடல் அழைத்துச் செல்வதை உணர்ந்திருக்கிறேன். ‘ஓம் சிவோஹம்’ (நான் கடவுள்) எனும் பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல் மிரட்சியூட்டும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது. தாள வகைகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒரே பாடலுக்கு ஒரு தாளத்தின் மிச்ரசாதியையும், கண்ட சாதியையும் ஒன்றிணைத்து அசத்தியிருக்கிறார்.

இளையராஜாவுக்கு ‘பத்ம விபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அவர் நாட்டுப்புறப் பாடல்களைத் திரையிசையில் பயன்படுத்தி உலகறியச் செய்தவர் என்பதோடு நிறுத்திவிடுகின்றன. அவர் நாட்டுப்புற இசையை மட்டும் உலகுக்கு எடுத்து விளம்பவில்லை. நாட்டுப்புற இசைக்குள் இருக்கும் செவ்வியல் தன்மையை எடுத்து, அதே இசைக்கு ஒத்த மேல் நாட்டு இசைக் கருவிகளின் ஓசைகளோடு சேர்த்திழைத்துவிடுகிறார். அதற்கு உதாரணம் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ (அவதாரம்) பாடல். படத்தில், பார்வையில்லாத நாயகியின் முன்னால் இசை வண்ணங்களைக் குழைத்து ஒரு ஓவியக் கலவையை வீசுகிறபோது, அந்தப் பெண்ணின் மனக்கண் திறந்து நிறங்களை உணர்ந்துகொள்கிறது. அது போன்று ஹிந்துஸ்தானி ராகத்தின் ஜோக், ஜோன்பூரி, பூபாளி, பஹாடி போன்ற ராகங்களை நம் மண்ணுக்குத் தக்கபடி உள்ளுணர்ந்து தமிழுக்குக் கொடையாகத் தந்திருக்கிறார். குறிப்பாக, ‘மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ (மெட்டி) என்கிற பாடலில் இளையராஜாவே முதலில் ஒரு ‘ஹம்மிங்’ செய்திருப்பார். இந்தப் பாடலில் யாராலும் மயங்காமல் இருக்க முடியாது.

பெரும்பாலும் திரையிசையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படாத ராகங்களை இசையமைத்துப் பாடுவதில் தன் தனித்துவத்தைப் புதுப்புது வடிவங்களில் வெளிப்படுத்தியிருப்பார். குறிப்பாக, ‘அமுதே தமிழே அழகிய மொழியே’ (கோயில் புறா) என்கிற பாடல் ஒரு நல்ல கவிதையைப் போன்று என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. அது சித்த ரஞ்சனியுமில்லை, கர்ண ரஞ்சனியுமில்லை.

இந்த ராகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு சொல்ல முடியாத போராட்டம் நடந்தது. எனது குருநாதர் காலமாகிவிட்டார். மற்றொரு குருநாதரிடம் விசாரித்தேன். பதில் கிடைக்கவில்லை. பிறகு, இளையராஜாவின் பேட்டி ஒன்றை இணையதளத்தில் பார்த்தேன். ‘அந்த பாடல் ப்ரிய ரஞ்சனி ராகம்’ என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கு இந்த ராகம் புதியது. கேரளாவில் உள்ள பல இசை வல்லுநர்களிடமும் விசாரித்தேன். இதுவரை இப்படி ஒரு ராகம் இருப்பது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர். பிறகு, ஆந்திராவில் உள்ள ஒரு பரதநாட்டிய ஆசானிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் அந்த ராகத்தின் ஆரோகணம் அவரோகணத்தை அனுப்பித் தந்தார்.

இப்படி வழக்கில் இல்லாத அரிதான ராகங்களையும் எடுத்துக் கையாள்வதில் வல்லவர் இளையராஜா. நாட்டார் பாடல், பண் இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி , மேற்கத்திய இசை வடிவங்களை நம் மண்ணுக்கே உரிய தன்மையோடு தந்த இளையராஜா தனித்துவம் மிக்க இசைமேதை!

-என்.டி.ராஜ்குமார், கவிஞர்.

Sunday, January 28, 2018

இசைஞானிப்புதுமைகள்

இசைஞானிப்புதுமைகள்...!

1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".

24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

Saturday, November 18, 2017

Honey vs Jam-ilayaraja

படித்ததில் பிடித்தது

இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தை கீழ் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சநேரம் விளையாடிச் செல்வது வழக்கம்.

ஒரு நாள் ஒரு துளித் தேனைத் தொட்டு அதன் நாக்கில் வைத்தேன். அக்குழந்தை சுவைத்தது.

பக்கத்திலிருந்த ஜாம் பாட்டிலைத் திறந்து அந்த ஜாமைக் கொஞ்சம் விரலில் தொட்டு அதன் நாக்கில் வைத்தேன் ருசிப் பார்த்துவிட்டுத் துப்பிவிட்டது.

மீண்டும் தேன் பாட்டிலைக் காட்டி தேனை நாக்கில் வைக்கச் சொல்லியது.

மறுநாள் வந்த குழந்தை வேறு விளையாட்டெல்லாம் முடித்துவிட்டு மீண்டும் அம்மேஜையருகே சென்றபோது, தேன் பாட்டிலைக் காட்டி நாக்கில் வைக்கச் சொல்லியது.
நான் வேண்டுமென்றே தெரியாததுபோல் ஜாம் பாட்டிலை எடுத்து திறக்க முயற்சிக்கும்போது, வேணா..வேணா..என்று அதை ஒதுக்கித் தள்ளி மீண்டும் தேன் பாட்டிலைக் காட்டி தேனை நாக்கில் வைக்கச் சொல்லியது. வைத்ததும் சுவைத்துவிட்டு மகிழ்ச்சியைக் காட்டியது.

இந்த நிகழ்வு,
அக்குழந்தை (குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா) தேன் பாட்டிலைக் குறிப்பிட்டு காட்டுவதும், தேனைத் தொட்டு அதன் நாக்கில் வைத்ததும் அது ரசித்து சுவைக்கும் அழகும்,
ஜாம் பாட்டிலைக் கையில் எடுத்தாலே வேண்டாம் வேண்டாம் என்று அது தலையை ஆட்டிக்கொண்டு கையால் அப்பாட்டிலை ஒதுக்கித் தள்ளும் அழகும், என் மனதைவிட்டு நீங்கா காட்சிகளாகும்.

அக்குழந்தை சென்றுவிட்டபின் நான் தனியே ஒருநாள் உட்கார்ந்திருந்தபோது, யோசிக்கலானேன்.

தேன் எப்படி உருவாகிறது.
ஜாம் எப்படி தயாரிக்கப்படுகிறது, என்று.

வலைத்தளத்தில் தேடும்போது கிடைத்த தகவல்கள்:

தேன்:
------
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும்.
மருத்துவ குணமும் கொண்டது.
பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது.
நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை.
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை.

ஜாம்:
------
பலவித பழங்களோடு, சர்க்கரைப்பாகு, நிறமி (colouring powder) இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து கூழாக்கி ஜாம் தயாரித்து பாட்டிலில் அடைக்கும்போது அது கெடாமல் இருப்பதற்காக பிரிசெர்வேட்டிவாக ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது உடம்பிற்கு ஆகாதாம்.
{In commercial jams there is always a preservative (mostly sodium benzoate or potassium metabisulfate) for longer shelf life. But not good for our life.}

ஆக,
இந்த இரண்டு சுவையான பொருட்கள், அவை உருவாகும் விதம், இவற்றோடு அக்குழந்தை அவைகளை சுவைக்கும் விதம்.

வழக்கம்போல் என் சிந்தனை சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது, 'லாஜிக்'கைத்தேடி.

தேன் என்பது, பல தேனீக்கள் பல தூரங்கள் பறந்து பலவகைப் பூக்களை நாடிச் சென்று அவைகளில் சுரக்கும் இனிமையான திரவத்தை மட்டும் தனியே உறிந்தெடுத்து அவற்றை ஓர் இடத்தில் ஒரு தேன்கூட்டில் வந்து சேகரித்து வைப்பதால் உண்டாகும் ஒரு திரவப் பொருளாகும்.

அத்தனை தேனீக்களின் உழைப்பு அதில் இருக்கிறது. அத்தனை வகை மலர்களின் இனிய திரவங்கள் அதில் உன்னன.
எல்லாம் இயற்கையாக.
எல்லாம் ஒரிஜினலாக.
எல்லாம் இனிமையாக.

அக்குழந்தை மீண்டும் மீண்டும் கேட்டு சுவைக்குமளவு திகட்டாத ஒன்றாக,
தேனைப் பார்க்கின்றேன், நான்.

என் சிந்தனை குழந்தையின் சுவையைக் கடந்து, இப்போது நான் தினம் திகட்டாமல் கேட்டுக்கொண்டிருக்கும் இளையராஜா இசைமீது தாவிச் செல்கிறது.

ஆம்,
ஒப்புமை செய்ய ஆரம்பித்துவிட்டது. என் மனதில் சட்டென்று தேனுக்கு இணையாக வந்த அந்த இளையராஜா இசையுணர்வை சரிபார்க்க விரும்பியது மனது.

தபலாவிற்குத் தனியாக ஆட்கள், டோலக்கிற்கு தனி ஆள், மணியொலியிசைக் கருவிகளுக்குத் (chimes) தனி ஆள்.

மேற்கத்திய தாளவகையாம்,
ட்ரம்ஸ் செட், பாங்கோஸ், கோங்காஸ், ட்ரம் பேட்ஸ் (pads) இவைகளுக்கு தனித் தனி ஆட்கள்.

பேஸ், க்ளாசிகல், எலக்டரிக், மெட்டல் என்று அத்தனை கிட்டார் வகைகளுக்கும் தனித் தனி ஆட்கள்.

ஃப்ளூட், க்ளாரினெட், ஷெனாய், சாக்ஸாஃபோன், ட்ரம்பட் வகைகளுக்குத் தனி தனி ஆட்கள்.

கீபோர்ட்ஸ், வீணை, சிதார், சாரங்கி, அக்கார்டியன், பாஞ்சோ இவைகளுக்குத் தனி தனியாக ஆட்கள்.

ஒரு பக்கம் ஸ்ட்ரிங் செக்‌ஷன் என்று அத்தனை வயலின்கள் ஆட்களோடு ஒரு குழுவாக, அது தவிர செலோ, வயோலா, டபுள் பேஸ், என்று இவைகளுக்கும் தனித் தனி ஆட்கள்.

இப்படித்தனி ஆட்களும் தனித்தனி தேனீக்களாக, தனித்தனி இசைக்கருவிகளும் தனித்தனி மலர்களாக.

ஓர் இசைக்கு இவ்வளவு கருவிகள் தேவையா.
ஆம் ஓர் இனிய இசைக்கு இவ்வளவும் தேவையே.

மேலும் இக்கேள்வி நம் மனதில் வருவதற்குமுன், இன்னொரு கேள்வி எழுந்திருக்கவேண்டும்.
அதாவது ஏன் இத்தனைக் கருவிகள் இவ்வளவு வேலைப்பாடுகளுடன் செய்யப்படவேண்டும் என்று.
தவிர அதை இயக்குவதற்கு பயிற்சிபெற்ற இசைக்கலைஞர் வேறு அமர்த்த வேண்டும்.

ஏதாவது காரணம் கண்டிப்பாக இருக்கும் என்று நம்பி யோசித்தோமானால் அப்போது தெரியவரும், ஒவ்வொரு கருவியும் எழுப்பும் ஒலியானது தனித்துவம் மிக்கது என்பதும். நல்லதொரு இசைக்கு அக்கருவிகள் தேவை என்பதும்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ராஜாசாரின் இசை தனித்து நமக்குப் பிடித்தமானதொன்றாக இருப்பதற்குக் காரணமே, நான் நம்புவது, இந்த இசைக்கருவிகளை அவர் ஜதை சேர்த்து ஒலிக்கச் செய்வதுதான் அல்லது இரண்டுக்குமேல் கூட்டுசேர்த்து இசைக்கச் செய்வதுதான், என்று.

நாம் புல்லாங்குழல் மட்டும்தான் ஒலிப்பதாய் நினைத்துக் கொண்டிருப்போம். அது புல்லாங்குழலுக்கான நோட்ஸ்தான். ஆனால் மிக அழகாக புல்லாங்குழலே வேறொரு தொனியில் ஒலிக்கக் கேட்போம். அது தனி சுகத்தைத் தரும்.

நான் உன்னிப்பாகக் கவனித்ததில் எனக்குத் தெரிந்தவரை கீழ்க்கண்டவாறு இசைக்கருவிகள் ஒரேயொரு ஒலிபோல (ஒரே மெட்டில்) ஜதையாகவோ, கூட்டாகவோ ஒன்று சேர்ந்து ஒலிக்கச் செய்யப்பட்டிருக்கின்றன.

ஃப்ளூட் + வயலின்
வீணை + சிதார்
தப்லா + டோலக்
தப்லா + கோங்காஸ்
தப்லா + பேஸ் கிட்டார்
வயலின் + சாரங்கி
கீபோர்ட் + எலக்ட்ரிக் கிட்டார்
கிட்டார் + மொராக்கஸ் (chimes வகை)
இதுபோல் இன்னும் இன்னும்..

இப்படி ஒரேவகை மெட்டுக்கு ஜதையாக ஒலிக்கச் செய்யவும், அல்லது வேறுவேறு மெட்டுக்களுடன் (கௌண்டர் பாயிண்ட் போலவும்) ஒரே நேரத்தில் கூட்டாக ஒலிப்பதற்கும் குறிப்பிட்ட இசைக்கருவிகளை ராஜா சார் கூட்டு சேர்ப்பார் அத்தனைக் கருவிகளும் அதன் அதன் பங்குக்கு இசையை வெளிப்படுத்தும்போது அப்பப்பா மிகப்பெரியதொரு சுகத்தை அதைக் கேட்பதில் உணரலாம்.

அதுமாதிரி இசைக்கருவிகளைத் தேர்ந்தெடுத்து நல்ல இசையை வரவைக்கும் திறன் ராஜாசாருக்கே உள்ள தனித்துவம்.

அவரது வெற்றியின் ரகசியம் இதுவும்தான்.

நான் இதுவரை சொன்னதெல்லாம் அந்த வயலின்கள் நிறைந்த ஸ்ட்ரிங் செக்‌ஷனைத் தவிர்த்து, மற்ற இசைக்கருவிகளின் கூட்டு பற்றி.

அந்த வயலின் குடும்பத்திற்கென்றே தனித்ததொரு இசையழகு உண்டு. அக்குழு மட்டும் கூட்டாக வாசிக்கும்போது, ஒவ்வொரு முறையும் 'நம் இதயம் கவர்ந்திழுக்கப்படும்'. சிம்ஃபனி இசைக்கு முக்கியமாகப் பங்காற்றுவது இந்த ஸ்ட்ரிங் செக்‌ஷனே ஆகும்.

இந்த குழுவை வாசிக்கவைத்து நம்மை உருகவைப்பதிலும் ராஜாசார் கைதேர்ந்தவர். வரம் பெற்றவர்கள் நாம்.

இதெல்லாம் தெரிந்ததொரு விஷயமாக இருக்கிறதே, மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்றலாமே என்ற கேள்வி நம்மில் கட்டாயம் எழும்.

முதலில் மேலே சொன்ன ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்கும் தனித்தனி ஷீட் மியூசிக் (இசைக்குறிப்புகள் அடங்கிய ஏடு) தரவேண்டும்.

யார் யார் எந்தெந்த ஸ்கோர் வாசிக்கவேண்டும் என்பதை இசையமைப்பாளர் முடிவெடுத்து தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

அதை அந்த ஏட்டில் அந்த வடிவத்தில் அக்குறிப்பிட்ட இசைக்கலைஞருக்கான பகுதி மட்டும் இருக்குமாறு பிரித்து எழுத அந்த இசையமைப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படியே தெரிந்திருந்தாலும் இத்தனைக் கலைஞர்களுக்கும் அவ்வளவு சிக்கிரத்தில் அதை எழுதிவிட முடியாது. எல்லாவற்றையும் ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. (ஒரு சிலருக்கு ஒரு பாடலுக்கே மாதக்கணக்கோ வருடக்கணக்கோ ஆகக்கூட வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு யோசிக்கவேண்டிய விஷயங்கள் அதிலுள்ளன)

இப்படித் தனித் தனியே எழுதிக் கொடுக்கத் தெரிந்தால்தான் அந்த இசையமைப்பாளருடைய சொந்த முயற்சியில் அந்த இசை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம்.

மேலே சொன்ன இத்தனை கஷ்டமான விஷயங்களையும் நம் இசைமேதை இளையராஜாசார் செய்து முடிக்க ஒரு பாட்டுக்கு அதிகபட்சமாக அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம்.

இது எப்படி சாத்தியம்.
அதுதான் அதிசயம்.
அவருக்கு மட்டுமே அது முடிகிறது.
ஆகவேதான் அவரை இறையருள் பெற்றவர் என்று எல்லோரும் நம்புகிறோம், அவர் உள்பட.

அவருக்கே அது புரியாத விந்தையாக இருப்பதால்தான் அதை வேறு யாருக்கும் அவரால் பயிற்றுவிக்க முடியவில்லையோ என்ற ஐயம் என்னில் இல்லாமலில்லை.

இறுதியாக, எப்படி பல தேனீக்களின் உழைப்பால் ஒரே கூட்டில் சேகரிக்கப்பட்ட மலர்களின் இனிய திரவம், 'தேன்' ஆகி திகட்டாத சுவையுடன் நீண்டகாலத்திற்கு இயற்கையாகவே கெடாமல் இருக்கிறதோ,

அதுபோலவே எண்ணிக்கையில் நிறைந்த இசைக்கலைஞர்கள் கொண்டு ராஜாசாரால் இயற்றப்பட்ட இசையாவும் சலிப்புணர்வு ஏதுமின்றி மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வண்ணம் காலம் காலமாய் நிலைத்து நிற்கும்.

இதை நான் சொல்கிறேன் என்பதைவிட என் லாஜிக் இப்படி சொல்வதை நான் நம்புகிறேன் என்பதுதான் உண்மை.

இந்த 'ஜாம்' சம்பந்தமாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவரவர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.