Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Monday, April 30, 2018

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!

திசை மாறிய தொப்புள்கொடி உறவுகள்!

நெய்யின் சுகந்த மணம், மெதுவாக சமையலறையிலிருந்து வெளிவந்து, வீடு முழுவதும் பரவியது.

அன்னபூரணி நெற்றியில் துளிர்த்த வியர்வையை, கைத்துண்டால் துடைத்தபடி, ஹாலில் வந்து அமர்ந்தாள்.

""என்ன பூரணி, பட்சணம் எல்லாம் தடபுடலா இருக்கு... வேலையை முடிச்சுட்டியா, இன்னும் ஏதாவது செய்யப் போறியா?''

""எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்ங்க. இன்னும் தேன்குழல் மட்டும்தான் செய்ய வேண்டியிருக்கு; அதை முடிச்சுட்டா, அவ்வளவு தான்.''

""எனக்கு ஒரு காபி தர முடியமா? மகனும், மருமகளும் வர்ற ஜோருல, என்னை மறந்துட்டியே...'' கிண்டலாக கூறினார் சுப்ரமணிய குருக்கள்.

""என்னை கலாட்டா செய்யலைன்னா, உங்களுக்கு பொழுதே போகாதே!'' சிறு முறுவலுடன் கூறியபடியே, காபி கலக்கச் சென்றாள் அன்னபூரணி.

சுப்ரமணிய குருக்களுக்கு 52 வயது. சென்னை வானகரத்தில் உள்ள அம்மன் கோவில் அர்ச்சகர். அன்னபூரணிக்கு வயது 47.

அவர்களின், ஒரே மகன் தான் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்சாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால் தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாட புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன் தான் முதல் மாணவன்.

பிளஸ் 2வில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது, இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுப்ரமணிய குருக்கள் மிகவும் திண்டாடி தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக, மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம், பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகசேர்ந்தான்.

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு, பணி மாற்றம் செய்யப்பட்டான்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக்கூடாது.

சிறு பிராயத்தில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டது போதும். இனிமேல், அந்த நிலை வரக்கூடாது என்று. நினைத்த அன்னபூரணி, திருமணத்தை உடனே முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாள்.

படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில் தொட்டுக் கொள்ள பொரியல் கூட இருக்காது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடுவான். குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர்.

ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

பரத்வாஜும், இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என்று, அடம்பிடிக்காமல் கிடைத்ததை சாப்பிட்டு, படிப்பு ஒன்றையே, ஒரு தவம் மாதிரி மேற்கொண்டிருந்தான்.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட உடனே திருமணம் நடந்ததால், அதுவரை அவனுக்கு வந்திருந்த உதவிப் பணத்தில், வங்கியில் படிப்பு லோனுக்காக பெற்றிருந்த கடனை அடைத்துவிட்டு, மீதி சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து தான், திருமண செலவுகளை மேற்கொண்டனர்.

மருமகள் சிந்துஜாவும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவள் அப்பா, ஒரு ஓட்டலில் சமையற்காரர். பிளஸ் 2 முடித்திருந்தாள்.

மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால், ஒரு சிறு நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

அவளுக்கு பின், மூன்று தங்கைகள் படித்து கொண்டிருந்தனர்.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும் ஒரே எண்ணம் தான். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், சிந்துவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும், அதன் பின், மாதம் ஒரு முறை... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

டெக்ஸாஸ் சென்ற பின், பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.

முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன், "அப்பா, இங்கே இருக்குற லைப் ஸ்டைலுக்கேற்ற படி வீட்டுக்கு, பர்னிச்சர் வாங்கணும்.

இங்கு கார் இல்லாமல் இருக்கவே முடியாது. அதனாலே, ஒரு ரெண்டு மாதம் கழித்து பணம் அனுப்பறேன்...' என்று கூறினான்.

அதற்கு சுப்ரமணிய குருக்கள், "நீ அங்கே வேண்டியதை செய்துக்கப்பா. இங்கே எங்களுக்கு என்ன பணமுடை... நாங்க ரெண்டு பேர் தானே... நாங்க சமாளிச்சுக்குவோம்...' என்று கூறிவிட்டார்.

அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் வந்தது கிடையாது.

சுப்ரமணிய குருக்களுக்கும், அன்னபூரணிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும். பட்டினி அவர்களுக்கு பழக்கம் தானே!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போது தான் சென்னை வருவதாக போன் செய்திருந்தான்.

அதற்கு தான் அன்னபூரணி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

அன்னபூரணியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.

பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு. வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு.

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா... அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ சென்னை வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் அன்னபூரணி.

மகன் சொல்லிச் சொல்லியே அன்னபூரணிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

எப்போதும் சுப்ரமணிய குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள், ஒரு மாதமாவது அங்கே போய் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்று தான் அன்னபூரணிக்கு ஆசை.

ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கிளியரன்ஸ் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்...' என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், சிந்துவும்.
ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் அன்னபூரணி.

இருவரும் ஏற்கனவே சிவந்த நிறமானாலும், இப்போது இன்னும் நன்கு சிவந்து, அழகாக இருந்தனர். பெருமை பிடிபடவில்லை அன்னபூரணிக்கு.

சுப்ரமணிய குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள்.

வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.''
""இல்லைப்பா, நாங்க சிந்து வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போது தான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது.

சிந்து தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

அன்னபூரணிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே சிந்து வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ்.

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்' செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் சிந்து.

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுப்ரமணிய குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

அன்னபூரணி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.

""ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.''

குருக்கள் தான் அவளை பலவாறு தேற்றி, சாப்பிடவைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் தனியாக பேசினான்.

""அப்பா, சிந்துக்கு அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா.

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்ன்னு உழைச்சு ஓடாயிட்டா.

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனால தான், உங்ககிட்ட சொல்றேன்.

அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

""அப்புறம்... சிந்துவிற்கு தனி குடித்தனமா இருக்கிறது தான் பிடிச்சிருக்குப்பா.

நீங்களும், அம்மாவும் அங்கே சாஸ்வதமா இருக்க முடியாதுப்பா. அவ பிரைவசியை விரும்புறா.

அம்மாவுக்கும், அவளுக்கும் ஒத்துப் போகாதுப்பா.

நீங்க அங்கே வந்தா, அவ உங்களை உதாசீனப்படுத்திடுவாளோன்னு எனக்கு பயமா இருக்குப்பா.

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்று தான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, ""என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

இரண்டு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...
""என்னங்க... டாக்டர் நான் மாசமா இருக்கறதை உறுதி செய்திட்டாரு; எனக்கு விதம் விதமா சாப்பிடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்குங்க.

எங்க அம்மா, "நான் இப்பத்தான், ஒரு மாசம் உங்க கூட இருந்தேன் மறுபடியும் அப்பாவையும், தங்கைகளையும் விட்டுட்டு வர முடியாதுன்னுட்டாங்க.

எனக்கு சாதாரணமான தினப்படி சமையல் தான் தெரியும். இப்ப என்னங்க செய்யறது?''

""நாம வேண்டுமானால், ஒரு சமையல்காரியை வேலைக்கு அமர்த்திக்கலாம்?''

""இங்கே அப்படியெல்லாம் சமையலுக்கு ஆள் கிடைக்க மாட்டாங்களே.''

""அப்ப என்ன தான் செய்யறது?''

""பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.''

""அப்பா ஒரு மாசம் வரை வேண்டுமானால், கோவிலை பார்த்துக்க வேறு ஆளை ஏற்பாடு செய்துட்டு வருவார். ஆனால்...'' அதுக்கு மேல முடிக்க விடவில்லை சிந்துஜா.

""அவர் எதுக்கு இங்கே வரணும்? உங்க அம்மா மட்டும் வந்தா போதும்.''

""நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?''

""அதெல்லாம், இங்க வறதுக்கு உங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசை.

சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கிறவங்க தானே?

இங்க வந்தா, மூன்று வேளையும் நல்லா சாப்பிடலாமே. நீங்க போன் செய்யுங்க சொல்றேன்.''

சிந்துஜா பேசுவது ஒன்றுமே பிடிக்கவில்லை பரத்வாஜ்க்கு, ""சரி, நல்ல சேதியை டாக்டர் சொல்லியிருக்காரு.

புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல... அங்க போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம். வந்து மீதியை பார்த்துக்கலாம்.''

இவர்கள் போன போது சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போது தான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து, அதிர்ந்தான் பரத்வாஜ்.

அங்கே நிற்பது யார்? அப்பாவா? கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.
"அப்பா...' அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

""கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.'' அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, ""அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' குருக்கள் முன்னே நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் இருவரும்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அன்னபூரணி, ""சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கே தான் இருக்காங்க.

அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.

தர்மகர்த்தாவும், "நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.

நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்'னு சொல்லிட்டார்.

""அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார்.

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் அன்னபூரணி.

""அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா.

அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா.''

""அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறது தான் சவுகரியம்.''

""அம்மா... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''
""இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது.

அவரை பார்த்துக்கறது தான், என் முதல் கடமை.

அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க.

வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு.

இதுக்காக எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மாத சம்பளம் தர்றாங்க. வேண்டுமானால் நீங்க ரெண்டு பேரும் இங்கே தங்கிக்குங்க.

நான் வேண்டியதை சமைச்சுப் போடுறேன்.''

""இல்லைம்மா. இங்கே குவார்ட்டர்ஸ் சின்னதா இருக்கு,'' என்று இழுத்தான் பரத்வாஜ்.

""ஒ... ஆமாம் உங்களுக்கு இங்கே பிரைவசி இருக்காது இல்ல... அதை நான் மறந்துட்டேன்.

சரிப்பா நான் தினமும், அவ விருப்பப்படறத சமைச்சு தர்றேன். நீ வந்து வாங்கிகிட்டு போ.''

""இல்லைம்மா. என் ஆபீஸ் ஒரு கோடியிலன்னா, வீடு இன்னொரு கோடியில, நீங்க இருக்கறது மற்றொரு பக்கம். தினமும் வர முடியாதும்மா. அது கஷ்டம்.''

""பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம், பசியும் பட்டினியுமா இருந்து, உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம்.

ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம்.

""கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது.

""ஆனா... உனக்கு எப்ப இங்கே வரணும்ன்னு தோணினாலும், நீங்க ரெண்டு பேரும் வரலாம்.

எங்களால முடிஞ்சத செய்றோம். இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு. நான் போய் பரிமாறணும்.

""உங்களுக்கு எது வசதியோ, அது மாதிரி முடிவெடுங்க. சாப்பாடு எல்லாம் இருக்கு; எடுத்துப் போட்டு சாப்பிடுங்க; நான் அரை மணி நேரம் கழித்து திரும்பி வருவேன்,'' என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் அன்னபூரணி.

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான்.

படித்ததில் பிடித்தது.

கள்ளழகர் கதை

கள்ளழகர் கதை

1650க்கு முன்பு வரை கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.

சோழவந்தான் அருகிலுள்ள தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி வந்தார்.

1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன் அழகர் ஆற்றில் இறங்கும்  விழாவையும் இனைத்து மதுரைக்கு மாற்றினார்.

அதற்கு முன்பு வரை கள்ளழகர், அழகர் மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர், சோழவந்தான், #திருவேடகம் வழியாக தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.

இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார்.

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது.

ஆனால் உண்மையில் மண்டூக மகரிசிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை,

(இதை ஏற்காமல் இன்றுவரை தேனூரில் ஒரு சமூகத்தினர் அழகர்கோயில் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இதைத் தொடர்ந்து தான் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக மதுரை வைகையாற்றில் அழகர் இறங்குமிடத்தில் தேனூர் பெயரில் மண்டபம் அமைத்து மரியாதை செய்ததுடன், மற்றொரு நாளில் தேனூர் அழகுமலையான் கோவிலிலிருந்து தேனூர் வைகையாற்றில் இறங்க ஏற்பாடு செய்தும்,

கள்ளழகர் மதுரையில் இறங்கும் அதே தினத்தில்  பாண்டியர் கால பழங்கோவிலான #சோழவந்தான் #ஜெனகைநாராயணப்பெருமாள் கள்ளழகராக #சோழவந்தான் வைகையாற்றில் இறங்கும் விழாவும் ஏற்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை 370  ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தான் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு பின்னர் சிவகங்கை மக்களின் வேண்டுகோளை ஏற்று மானாமதுரை மற்றும் பரமக்குடி யிலும் அழகர் இறங்கும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 28, 2018

The Magic of Water

தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு...

சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது,மணல் திருட்டு,தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது,மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன்.அதைக் கேட்ட நண்பர்,

"ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே" என்று பரபரக்க கேட்டார்.

"இருக்கலாம்ங்க..ஏன் கேக்குறீங்க" என்றதும்,

"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று கேட்டுவிட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.

டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto).ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர்.தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம்.இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை,புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் தனக்கு தரப்படும்,தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும்.அதை வெளிப்படுத்தவும் செய்யும்.

ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில்,அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது.அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதே ஜாடி தண்ணீரை எடுத்து-எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து,கோபத்தையும்,கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது,அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.

உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது.யோர்டான் நதிக்கரையில் இயேசுவிற்கு ஞானஸ்னானம் தரப்பட்டதும் தண்ணீரால் தான்.

பள்ளிவாசல்களில் ஓதிவிட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால் தான்.

இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை.யாகம் முடிந்து,ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத் தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.

பெரிய ஞானிகள்,முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.

தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது.அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்துவிடும்.பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரையோரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர்.அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.

ஆற்றலை ஆக்கவோ,அழிக்கவோ முடியாது.ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம்.அதாவது energy conversion law.

மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான்.அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது.அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன.உயிர்கள் செழிக்கின்றன.

அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது.

எது அளவு,எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான்.அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.

கெடுப்பதும் கெட்டாருக்கு சார்வாய் மற்றாங்கே,எடுப்பதும் எல்லாம் மழை--என்கிறார் வள்ளுவர்.கொடுப்பதும் மழை,கெடுப்பதும் மழை என்கிறார்.

இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ்படுத்துகிறோம்.

எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்.

இறுதியாக,உறுதியாக ஒன்று,

மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது.மனித மூளை 90% தண்ணீரால் ஆனது.

தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது.அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும்.

எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்.....

(The Magic of Water,Doctor Masaru Emoto என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.)