வேள்பாரி வாசகர்கள் தயாரித்துள்ள “ஏழிலைப்பாலை” சிறப்பு மலரில் வெளிவந்துள்ள எனது நேர்காணலில் ஒரு பகுதி.
கேள்விபதில்
1.வேள்பாரி படித்தவுடன் எங்களின் மனத்தில் பாரியாக உங்களையே நினைத்துக்கொண்டோம். உங்களுக்குப் பாரியாகத் தோன்றியவர் யார்?
கண்டறிந்ததை எழுதுவதன்று, எழுதிக்கண்டறிவதுதான் எழுத்து.
2.நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் ஆகிய இரண்டும் இருவேறு அடையாளங்கள். சிக்கிக்கொண்டீர்களா? சகித்துக்கொண்டீர்களா?
அரசியற்செயல்பாட்டாளன், எழுத்தாளன் என்னும் இரு பணிகளும் நான் எனது இருபதாவது வயதில் ஏற்றுக்கொண்ட பாதைகள். இரண்டிற்கும் நடுவில் முரண்களும் குழப்பங்களும் திகைப்பும் ஏற்படாமல் இருக்க வாய்பேயில்லை. இந்த முரண்சுவையே வாழ்வின் சாரமாகிறது.
ஒன்றுக்கு ஒன்று உள்ளீடாக இருந்து செயல்படுகின்றன. அதே நேரத்தில் ஒன்றின் தேவையை இன்னொன்று கணக்கிற்கொள்ளாத குணத்துடனேயே இருக்கின்றன. அதனால் ஏற்படும் உராய்வு வலியையும் தரும் ஒளியையும் தரும்.
வலியும் ஒளியும் அனைவரின் வாழ்வுக்கும் பொதுவானவை.
ஆனால் அவற்றைக் கூடுதலாக்கிக்கொள்ளும் துறையைத் தேர்வுசெய்வது கொண்டேன், சிக்கலைச் சகித்தபடி ரசித்துக்கொண்டு.
3. அரசியற்களத்தில் எழுத்தாளனின் மனம் என்னவாக இருக்கிறது?
எந்தக் களத்தில் செயல்பட்டால் என்ன, எழுத்தாளன் எழுத்தாளன்தான். நுட்பமான அவதானிப்பையும் அறத்தின் எச்சரிக்கைக்குரலையும் இழந்துவிடாமல் இருப்பது படைப்பாளியின் அடிப்படைப்பண்பு. இஃது அரசியல் செயல்பாட்டாளனுக்கும் பொருந்தவேண்டும்தானே.
ஒரு நிகழ்வைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேர்தல் நாளுக்கும் வாக்குஎண்ணும் நாளுக்கும் ஒன்றரை மாத இடைவெளி இருந்தது. அப்பொழுது மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்குப்பெட்டியைப் பாதுகாத்து வைத்திருக்கும் அறைக்குள் விதிகளை மீறி வட்டாட்சியர் ஒருவர் நுழைந்தார் என்ற தகவல் வந்தது. நான் இரவு 8 மணிக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் மையத்துக்குச் சென்றேன். பிரச்சனை உடனடியாக வெளியுலகுக்குத் தெரியவந்தது. தோழர்களும் தோழமைக் கட்சியைச் சார்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டார்கள். தொலைக்காட்சிகள் நேரலைகளைத் தொடங்கிவிட்டன. உள்ளே தவறேதும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் சாதித்தனர். “தவறு நடந்துள்ளது, எனவே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ( ) காட்சிகளைப் பார்க்காமல் இங்கிருந்து போக மாட்டேன்” என்று நான் கூறிவிட்டேன். பிரச்சனை பெரிதாகிக்கொண்டிருந்தது. வெளியே கூட்டம் அதிகமாகிக்கொண்டிந்தது. அதிகாரிகள் தேர்தல்பார்வையாளர்கள் என எல்லோரும் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள்.
நான் நிற்பதற்குச் சற்று அருகில் மருத்துவக்கல்லூரியின் சுவரோரமாக, படிகளையொட்டி வெளிச்சம் குறைவான பகுதியில் இருந்து சற்றே வித்தியாசமான ஓசை கேட்டது. அருகில் சென்று செல்போனில் இருக்கும் லைட்டை அடித்துப்பார்த்தேன். அன்று பிறந்த நாய்க்குட்டிகள். முணங்கியபடி இருந்தன. தாயைக்காணவில்லை. கூட்டத்தின் ஓசையால் எங்கும் போய்விட்டதா அல்லது உணவு தேடிப்போனதா என்று தெரியவில்லை.
கதவினையொட்டி உள்ளேவரத் தயாராயிருந்த பெருங்கூட்டம். கூட்டத்தைக் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அதிகாரிகள் திணறிக்கொண்டிருந்த போது, நான் அரையிருட்டிலிருந்து மேலெழும் இளங்குரலுக்கு செவிமடுத்துக்கொண்டிருந்தேன்.
நேர்மையான இளம் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கிருந்தார். பிரச்சனையை எப்படிக் கையாள்வது, என்னிடம் வந்து என்ன பேசுவது என்ற குழப்பத்தில் இருந்தார். சற்றே தயங்கியபடி என்னிடம் வந்து நிலைமையைக் கையாள்வது பற்றிய ஓர் ஆலோசனையைச் சொல்லவந்தார். அவர் பேசுவதற்க்கு முன்பு நான் சொன்னேன், “ஒரு சாக்குப்பையோ, பெரிய தட்டோ இருந்தால் காவலர் ஒருவரை எடுத்து வரச்சொல்லுங்கள்”.
அவருக்கு நான் கேட்பது புரியவில்லை. வெளியில் பெருங்கூட்டம், சத்தம் பெரிதாகிக்கொண்டிருந்தது. நான் அவரை அழைத்து டார்ச்சடித்துக் காண்பித்தேன், படியின் ஓரத்தில் கண்திறந்தும் திறக்காமலும் இருந்த குட்டிகள் சுருண்டு கிடந்தன. “ஊடகத்தினரும் அதிகாரிகளும் திமிதிமுவென உள்ளே நுழைந்தால், இவை மிதிபட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே முதலில் இவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்” என்றேன்.
அவர் அந்தக் கணத்தில் என்ன நினைத்தார் என்பதை அவரது பார்வையிலிருந்து என்னால் கண்டறியமுடியவில்லை. ஆனால் உடனே அதனைச் செய்தார்.
“மதுரையின் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் புகுந்தது யார்?”, “காவலர்களோடு மோதும் கட்சிக்காரர்கள்” என எல்லாத் தொலைகாட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்த போது நாங்கள் நாய்க்குட்டிகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தோம்.
அரசியற்செயல்பாட்டாளனுக்கு வாக்குப்பெட்டி ஒன்றரை மாதகாலம் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பது மிகமுக்கியம். அவற்றினூடே எழுத்தாளனின் மனத்துக்குள் பாதுகாப்பாக உறங்கத் தொடங்கிய நாய்க்குட்டிகளுக்குக் காலவரையறையேது?
4. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் எம்.பி. ஆகி விட்டீர்கள். எம்.பி.யாக உங்களின் தற்போதைய கனவு என்ன?
எம்.பி.யாக உள்ள எனது கனவு, எம்.பி.யாக முழுமையாகச் செயல்படுவதுதான். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இப்போதைய அரசியற்சூழலில் அஃது எளிய ஒன்றன்று.
குற்ற உணர்சிக்கு உள்ளாகாத நாள் என ஒன்றில்லை. எளிய மனிதர்களின் துயரங்களாலும் கண்ணீராலும் சமூகம் நிரம்பிக்கிடக்கிறது. ஆனால் அதிகாரத்தின் கண்களுக்கு அவை தெரிவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர் அரசதிகாரத்தைப் பிரதிபடுத்துபவர். அதே நேரத்தில் மக்களின் குரலுக்காக அதிகாரத்தைச் செவிசாய்க்க வைக்க வினையாற்றுபவர். இடிப்பார் இல்லா ஏமாரா மன்னனின் காலத்தில் இடித்துரைக்கும் பணி பெரிதிலும் பெரிது.
5. பாரி அளவிற்கு மற்றவர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றனவா?
பாரிக்கு கபிலர்போல் மற்ற வள்ளல்களுக்குத் தோழனோ, புலவனோ, தோழனே புலவனாகவோ வாய்க்கவில்லை. எனவே பாரி அளவுக்கான குறிப்புகள் மற்றவர்களுக்கு இல்லை.
6. எழுத்து என்னவெல்லாம் செய்யும்?
பித்துப்பிடிக்க வைக்கும். பின் தெளிய வைக்கும். தெளிவு ஏற்பட்ட பின் அது மாயையோ என்று எண்ணத்தோன்றும்.
நீங்கள் எழுத்தாளராக இருந்தால் அதனிடம் மண்டியிடுவது அதற்குப் பிடிக்காது. அதனை மண்டியிடவைக்கும் முயற்சி உங்களுக்கே பிடிக்காது. எனவே அதன் ஆளுகையில் நீங்கள் வசிப்பீர்கள் உங்கள் ஆளுமையுடன்.
7. வேள்பாரிக்கு முன் பின்னான சு.வெ. யை ஒப்பிடுங்களேன்.
முன்னவன் காவல்கோட்டம் போன்ற இன்னொரு படைப்பை எழுதிவிட முடியுமா என்று தவித்தலைந்தவன். பின்னவன் வேள்பாரி போன்று இன்னொரு படைப்பை உருவாக்க முடியுமா என்ற தவிப்பில் இருப்பவன்.
8. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை நட்சத்திர எம்.பி.களாக மிளிர்பவர்கள் யார்?
அரசியல் சாசனம், நாடாளுமன்ற மாண்பு, ஜனநாயகக்கோட்பாடு என எல்லாவற்றையும் மதிப்பிழக்கசெய்பவர்களுக்கு எதிராக இந்த மூன்றையும் மதிப்பவர்கள் நாடாளுமன்றத்தில் சிறிய அளவிலேனும் செயல்படுவதுகூட மிகமுக்கியம் என்று நினைக்கிறேன்.
எனவே, இன்றையச் சூழலில் எதிர்கட்சியினராகச் செயல்படும் ஒவ்வொரு எம்.பி.யும் நம்பிக்கை நட்சத்திரம்தான்.
9. வேள்பாரி எழுதத் தொடங்கிய போது இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும். இந்த நாவல் வாசகர்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஊகித்தீர்களா?
குதிரை ஓடத்தொடங்கிய கணத்திலேயே அதன் வேகத்தையும் ஆற்றலையும் ஊகிக்க முடியாதவனால் அதன் மீது எப்படிப் பயணம் செய்ய முடியும்?
10. வேள்பாரியைப் படித்தபிறகு ஒரு கூட்டமே இப்படி (நாங்கள்) பாரியையும் உங்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே, எங்களை எப்பொழுதாவது நினைத்துப் பார்த்துச் சிரித்துக்கொள்வீர்களா?
இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன்தானே நானும். படித்த பிறகு உங்களுக்கு ஏற்பட்டது, எழுதத் தொடங்கியதும் எனக்கு ஏற்பட்டது. அவ்வளவுதான் வித்தியாசம்.
பறம்பின் கனவைக் கலைக்காமல் வாழ்தல் எவ்வளவு பெரிய வரம். வாழ்வாங்கு வாழுங்கள். தேனின் சுவை, சுவைப்பதிலன்று, சுவைத்ததில் இருக்கிறது. அதுதானே பறம்பின் வாழ்வு.
11. காவல்கோட்டத்திற்கு சாகித்ய அகாடமி கிடைத்தது. ஆனால் வேள்பாரி அளவிற்கு வாசகப் பரப்பைச் சென்றடையவில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு உள்ளதா?
ஒரு படைப்பு, தான் நினைத்த அளவு முழுமைகொண்ட இறுதிவடிவத்தை அடைந்ததா இல்லையா என்பதே எழுத்தாளனின் மகிழ்ச்சிக்கான அல்லது வருத்தத்துக்கான காரணமாக இருக்க முடியும். மற்றவை மகிழ்ச்சிக்கான அல்லது வருத்தத்துக்கான காரணமாக அமைவது எழுத்தாளனுக்கு அழகல்ல!
12. காவல்கோட்டம், வேள்பாரி ஒரு வரியில் ஒப்பிடுக?
காவல்கோட்டத்தில் வரலாறுதான் நாயகன். வேள்பாரி வரலாற்று நாயகன்.
13. இந்தியா எப்பொழுது அனைவரையும் உள்ளடக்கிய வல்லரசு நாடாக ஆகும்?
இந்தியாவுக்கு இப்பொழுது மட்டுமன்று, எப்போதும் தேவை நல்லரசுதான். வல்லரசு என்ற சொல்லாடலே மக்கள் சமூகத்துக்கு எதிரானதுதான்.
14. இலக்கியக்குதிரையா, அரசியற்குதிரையா எதில் பயணிக்க அதிக விருப்பம்?
இரண்டு குதிரைகளையும் ஒருதேரில் பூட்டியிருக்கிறேன். பயணிக்கிறோம் என்பதே பயணத்துக்குப் போதுமானதாகத் தோன்றும். ஆனால் அப்படி நம்மை இருக்கவிடாதவை இலக்கியமும் அரசியலும்.
15. 'ஒருநாள் நீலனா'க இருந்து எங்களை ஒரு மலைப்பயணத்திற்கு அழைத்து செல்வீர்களா?
நான் நீலனாக இருந்து மலைப்பயணத்துக்கு அழைத்துச்சென்றிருக்கிறேன். ஆனால் உங்கள் நீலனை நீங்கள்தான் கண்டறியவேண்டும்.
16. சிறுவயது சு.வெ. எப்படிப்பட்டவர்?
துருதுருவென இடந்தங்காச் சிறுவன். எந்நேரமும் வெளியில் அலைந்தவன், விளையாடித்திரிந்தவன். அதன் பொருட்டு அப்பாவிடம் அதிகம் அடியும் வசவும் வாங்கியவன். பாட்டி, தாத்தாக்களின் செல்லப்பேரன்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குப்பைமேடு இருந்த காலம் அது. வருடத்துக்கு ஒருமுறை அந்தக் குப்பைகளை மாட்டுவண்டிகளில் அள்ளிப்போய் விளைநிலங்களுக்கு உரமாகக் கொட்டுவோம். குப்பைமேடுகளில்தான் தக்காளிச்செடிகள் அதிகம் விளையும். அதிகமான தக்காளிச்செடிகளைக் குப்பைமேடுகளில் இருந்து அடிமண்ணோடு பறித்து வந்து வீட்டுத்தோட்டத்தில் நட்டுவைப்பதே வேலை.
பால்யத்தை நினைத்துப்பார்த்தால், வீட்டில் ஈன்ற கன்றும் அடைபடுத்தகோழியும் தக்காளிச்செடிகளும் கண்மாய்குளங்களில் அலைந்து மீன்பிடித்துத் திரிந்ததும் பொழுதெல்லாம் விளையாடியதும்தான் நினைவெங்கும் நிற்கின்றன.
என் பாட்டி அடிக்கடி சொல்வாள் “ரெக்க மட்டுந்தாண்டா இவனுக்கு இல்ல”. ஆனால் அவள் சொல்லிச்சென்ற கதைகள் எனக்கு அதையும் கொடுத்தன.
17. உங்களின் முதல் புத்தகம் ஓட்டையில்லாப் புல்லாங்குழல். நூல் வெளியான பின் என்ன மாதிரியான மனநிலையை அது கொடுத்தது?
முருகன் அச்சகத்தில் எழுத்துகளைக் கோர்த்து ட்ரெடில் மெஷினில் அச்சான அந்த முதல்தாளினை இன்னும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய கனவின் தொடக்கம் அது.
கல்லூரியின் முதல் ஆண்டில் புத்தகம் வெளியிட்ட கவிஞன். கல்லூரி வளாகத்துக்குள் கால்களால் நடந்ததாக ஞாபகமே இல்லை. அது பறந்தலைந்த காலம். அந்த பறத்தலைச் சாத்தியமாக்கியது ஓட்டையில்லாப் புல்லாங்குழல்.
”சின்ன கண்ணன் பெரிய மனுஷனாகிவிட்டான், ராதையே நீ எங்கிருந்தாலும் வா, மாலையுடன் வா” என்று அணிந்துரையில் அறைகூவி அழைத்திருப்பார் கவிஞர் மீரா. அதன்பின் பறக்காமல் எப்படி நடந்து திரிய முடியும். மீராவால் மெருகூட்டப்பட்ட வண்ணச்சிறகுகள் என்னுடையவை.
19. சமீபத்திய ஆச்சர்யம்?
கிண்ணிமங்கலம். ஈராயிரம் ஆண்டுகளாக ஓரிடம் பள்ளிப்படையாக இருந்திருக்கிறது. இன்றுவரை அறுந்துவிடாத வரலாறாக இருக்கிறதென்பது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
#ஏழிலைப்பாலை
No comments:
Post a Comment