யாருக்கு நம் ஓட்டு
ஆரம்பித்து விட்டது தேர்தல் திருவிழா, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் கோலாகலக் கொண்டாட்டம், அரசு பணத்தில் நடக்கும் ஒரு காட்சி ஊடகப் பெருவிழா,
எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டி, வரிசை கட்டி மக்களிடம் வந்து நிற்கப் போகின்றன, எல்லாவித சர்க்கஸும் நடக்க இருக்கிறது, எல்லோரும் ஓட்டுப் போட்டு உங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றி, ஒரு தலைவனையும், ஒரு கட்சியையும், ஒரு சித்தாந்தத்தையும் வெற்றி பெற வைக்கப் போகிறீர்கள்.
யாரையும் கட்டாயப்படுத்தி ஓட்டுப் போட வைக்க முடியாது, ஆனால் நீங்கள் ஓட்டுப் போட்டவர்கள் உங்களுக்காக வேலை செய்வார்களா?
நம்மிடம் ஒரு பிம்பம் இருக்கிறது, அரசியல்வாதிகள் நம்மைச் சுரண்டுகிறார்கள், சம்பாதிக்க வருகிறார்கள், வரி என்கிற பெயரில் வழிப்பறி செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஊழல்வாதிகள் என்று பொதுப் புத்தி கொண்டு அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதற்கு முன், அவர்கள் மக்களுக்காக சேவை செய்யவும் வருகிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும், சில பேர் காசுக்காக, புகழுக்காக, பதவிக்காக இடம் பெயர்கிறார்கள், சிலர் பணத்துக்காக அரசியல் செய்கிறார்கள், கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள், இது பத்து சதவிகிதத்துக்கும் கீழ் தான், இதுவும் நமக்கு விழிப்புணர்வு வந்து, அதோடு சமூக வலைதள எழுச்சிக்குப் பின் மேலும் குறையும்.
நம்மிடம் இருக்கும் இன்னொரு பிரச்னை, யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்கிற தெளிவின்மை, நிறைய நண்பர்களுடன் பேசிய போது, மிகச்சிலர் நல்ல தெளிவுடன் இருக்கிறார்கள், நுண் அரசியலைக்கூர்ந்து கவனிக்கிறார்கள், சிலர் யாருக்குப் போடலாம் என்று நம்மையே கேட்கிறார்கள், சிலர் எங்க தாத்தா அந்தக் கட்சி, எங்க அப்பா இந்த கட்சி, நான் எப்பவுமே இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவேன் என்று அறியாமையில் பேசுகிறார்கள். உங்கள் ஓட்டு எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று தெரியுமா?
நான் ஒருவன் ஓட்டுப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது, என்ன மாறி விடப் போகிறது என்னும் கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது, நம் ஒரு ஓட்டு ஒன்றும் செய்து விடாது, ஆனால் நம்மைப் போல் பலரது ஓட்டு சேரும் போது அதற்கு ஒரு மகோன்னத சக்தி வந்து விடுகிறது, ஆட்சி மாற்றத்தை, சித்தாந்த மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை உருவாக்கி விடுகிறது.
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் உங்களை அடுத்த ஐந்தாண்டு ஆளப் போகிறார்கள், உங்களுக்காகப் பேசப் போகிறார்கள், உங்களுக்கான சட்டத்தை இயற்றப் போகிறார்கள், உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவா பாதிக்கப் போகிறார்கள், அந்தப் பாதிப்பு எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக (positive) இருப்பதற்கு நீங்கள் போடும் ஓட்டு மிக முக்கியம்
நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உங்கள் சேவகர், நீங்கள் ஓட்டுப் போடாமல் எதிரணியில் வெற்றி பெற்றவர் கூட உங்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் தான், அவரிடமும் நீங்கள் வேலை வாங்கலாம், அதற்கெல்லாம் முன்னால் அவர்களிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்கிறதா?
எனக்கு என்ன வேண்டும் என்று நான் பதிவிடுகிறேன், உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் பதிவிடுங்கள்.....
No comments:
Post a Comment