காதல் என்பது
காதல் – இந்த சொல் ஏற்படுத்தும் ஈர்ப்பு எத்தனை நூற்றாண்டுகளாக ,எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் ?
.கடிதம் கொடுத்தால் அடி ,உதை .பேசிவிட்டால் பேரதிர்ஷ்டம்.பார்த்தாலே பரவசம். எனது இருபது வயதில் இருந்த சூழல் இன்று இல்லை.மூன்று மாத காலம் தொடர்ந்தால் புன்னகை , ஆறுமாதம் தொடர்ந்தால் ஒரு கண்ணசைவு, ஒரு வருடம் தொடர்ந்தால் ஒரு கையசைப்பு.என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த காதல்.திருமணத்தை நோக்கி போவது என்பது மிகுந்த வலி.திருமணம் என்பது இங்கு விரும்பும் தகுதி உடைய ஆண், பெண் மட்டும் முடிவெடுத்து நடந்து விடுவதில்லை. அதற்கான சமூக காரணிகள் ,பொருளாதார பின்புலம் இவை எல்லாம் நெறிப்பதை தாண்டி வாழ்ந்து விட்டால் பேரானந்தம்.
தாவணி ,புடவை ,நெடுங்கூந்தல்,சூடிய மலர்,வாசித்த புத்தகம் கடைசியாக சுடிதாரின் துப்பட்டா ,என ஆணுக்கும் சைக்கிள் பெல் ,வண்டி ஹாரன் ,பெட்டிக்கடை ,அவருடைய நண்பர்,வீடு ,அம்மா ,தங்கை என எல்லா நிகழ்வும் உறவும் காதலை பரவசப்படுத்த காதலித்த காலம் அவை .
புடவை முந்தானையோ ,துப்பட்டாவோ முகம் தழுவிப்போகும் கணத்தை உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகள்.
இன்றைய உடையிலிருந்து ,தோற்றத்திலிருந்து ,எல்லாம் மாறிவிட்டது.ஜீன்சும் ,வட்ட கழுத்து பனியன் அணிந்த ஒரு காதலியை நினைத்தே பார்க்க முடியவில்லை.கொஞ்சுவோர் இருக்கலாம்.அது அவர்கள் பாடு.பெண்ணென்று அவர் அவர் வாழ்ந்த காலத்திற்கு ஒரு தோற்றம் உண்டு தானே . ஜானகிராமனின் மோகமுள்ளை படித்து விட்டு , அரை ட்ரவுசரோடு திரியும் பெண்ணை நினைத்தாலே ஐயோ என ஆகிவிடுகிறது.காலமாற்றம் என்று புறந்தள்ளி விடுவோம்.அந்த பெண்ணை பார்த்தும் பரவசம் கொள்ளும் பையன் இருக்கக்கூடும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் பரஸ்பர ஈர்ப்பை மேம்படுத்த தானே உடைகள் ,அலங்காரம் எல்லாம்.நல்ல தோற்றமும் ஆளுமையும் கொண்ட எவரையும் எவரும் விரும்புவர்.அவை இயல்பிலேயே இருக்க வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி நிகழ்கிறதா என்ன?
காதலிக்க ஆரம்பிக்கும் காலத்தில் பொலிவான ஆடை , வாகனம், தனது தோற்றத்தை மேம்படுத்திக்காட்டவும் , இல்லாததை இருப்பதாக பாவித்தும் ,இயல்பான குணத்திற்கு நேரெதிரான குணத்தை வெளிக்காட்டியும் வளர்ந்த காதல்.திருமணத்திற்கு பின்பு இனி என்ன ஆகப்போகிறது என அவரவர் இயல்புக்கு மாற , இளையராஜாவின் இசை எனக்கு உயிரென்றவன் கொஞ்சம் அதை நிறுத்த மாட்டியா ? எப்போ பார் பாட்டு என்றால் ஒவ்வொரு முறை முத்தத்தின் போதும் கன்னத்தில் முத்தத்தின் வாசனை மீதமிருந்த காலம் போய் கொஞ்சம் வாய் கொப்பளிச்சுட்டு வரக்கூடாதா ? என்றால்
தோற்றம் என்பது ஒரு ஈர்ப்பு , அதனை கடந்து உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாது, நேசத்தின் இடையே வேஷம் கட்டாது நமது வாழ்நாள் முழுதும் இணையாகவும் ,துணையாகவும் வருபவரை தேடி அடைவதற்கான முயற்சி.,காதல் ஒரு அழகான தேர்வு.நம்மை எவருக்காகவும் எதற்காகவும் , எங்கும் விட்டுத்தராத ஒரு தோழமையை அடைவதற்கான வாய்ப்பை உடல் இச்சைக்காக ,பொருள் தேவைக்காக,உயிரின் இயல்பான உணர்வை ,தேடலை மலினப்படுத்தும் எவருடைய வாழ்வும் அதற்கான வேதனையை கொண்டு வந்தே தீரும்.
காதல் – நமக்கு எது வரினும், நேரினும் அவன் இருக்கிறான் ,அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கை , ஒருவருக்கொருவர் இனம்புரியாத ஈர்ப்பில் காலமெல்லாம் கட்டுண்டு கிடக்கும் உறவு , ஒருவருக்கொருவர் எண்ணத்தையும், செயலையும் மதித்து பகிர்ந்து கலந்து கிடக்கும் அற்புதம். இருவருக்கிடையே மலர்ந்து ஊரெங்கும் அன்பை மணக்கச்செய்யும் மாயம்.
ஈசன் தன் காதல் நல்லாளுடன் நமக்குள் விதைப்பதும் அந்த அன்பையும் நம்பிக்கையுமே .
No comments:
Post a Comment