தாங்கள் வேண்டிய படி கடவுள் உதவவில்லை என்று மதம் மாறுகிறவர்களுக்காக
ஒரு முட்டாள் பத்து ரூபாய் பணம் கொடுத்து லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கினான். ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அவனுக்கு விழுந்தது. ஒரு கோடி ஒரு கோடி என்று எதிர்பார்த்த படி பரிசு வாங்க போனான்.
முப்பது சதவிகிதம் வரி பிடித்துக் கொண்டு எழுபது லட்சம் தருவார்கள். அது தான் சட்டம் என்று சொல்லப்பட்டது. வந்ததே கோபம் மடையனுக்கு.. "நீங்களும் ஆச்சு உங்கள் சட்டமும் ஆச்சு.. யாருக்கு வேண்டும் உங்கள் எழுபது லட்சம்.. யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.. நீங்களே வைத்து கொள்ளுங்கள் உங்கள் பரிசுத் தொகையை..மரியாதையாக இந்த டிக்கெட்டுக்கு நான் கொடுத்த பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுங்கள். நான் போய் வேறு மாநில லாட்டரி வாங்கிக் கொள்ளுகிறேன்" என்று கூச்சல் இட்டான்.
இவனது நிலை தான் நீங்கள் குறிப்பிட்ட மனிதர்களின் நிலையும். இந்த மதத்தில் இந்தக் கடவுள் தரவில்லை என்றால் அந்த மதத்தில் அந்தக் கடவுள் தருவார் என்று போவதும் இதே மடத்தனமான மனோபாவம் தான். இவர்கள் பெற்ற எழுபது லட்சத்தை இழந்து விட்டு பழைய பத்து ரூபாய்க்குப் பயணம் புறப்படுகிறவர்கள்.
அவரவர் கர்ம வினைப்படி தெய்வம் தருகிறது. இந்த சட்டத்தை மீற முடியுமா? எந்த லாட்டரி ஆனாலும் வரி கட்டித்தானே ஆக வேண்டும். அது போல எந்தக் கடவுள் என்றாலும் நீதி நெறிப் படித்தானே மனிதனுக்கு நன்மை தீமை தர வேண்டி இருக்கும். வேறு மதத்திற்கு போய் விட்டால் அந்தக் கடவுள் தகுதி அற்ற ஒருவனுக்குக்கு அள்ளி கொடுத்து விட முடியுமா என்ன? தெய்வீகம் பற்றிய தெளிவற்றவர்களே இந்த மாதிரி காரணங்களுக்காக மத மாறுதல் விளையாட்டு நடத்துகிறார்கள்.
No comments:
Post a Comment